2022ல் அமேசான் காடுகளில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது கூலிப்படையால் கொல்லப்பட்ட டாம் பிலிப்ஸ் (Dom Phillips) மற்றும் புருனோ பெரிரோ (Bruno Pereira) ஆகியோரின் பெயர்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய ஈஸ்ட் இனங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. நொதித்தலில் உதவும் இந்த ஈஸ்ட் இனங்கள் சர்க்கரைநோய் சிகிச்சையில் பயன்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்தப் புதிய இனங்கள் ஸ்பாத்தோஸ்போரா (Spathaspora) என்ற நான்கு ஈஸ்ட் தனித்த இனங்களில் (isolates) இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை செயல்முறை மற்றும் பரிணாம நுண்ணுயிரியல் (Systematic& evolutionary microbiology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு இனங்களும் டி-சைலோஸ் (d-xylose) நொதியை சைலிட்டால் (xylitol) மற்றும் எத்தனாலாக மாற்றும் திறன் பெற்றவை.
நோய் சிகிச்சையில் புதிய இனங்கள்
நொதித்தல் மூலம் கிடைக்கும் புதிய பொருட்கள் சர்க்கரைநோய் சிகிச்சையில் இனிப்பூட்டி மற்றும் உயிரித் தொழில்நுட்ப செயல்களுக்குப் பயன்படக்கூடியவை என்று ஆய்வாளர்களில் ஒருவரான கார்லோஸ் அகஸ்ட்டோ ரோசா (Carlos Augusto Rosa) கூறுகிறார். பூமியின் 10% உயிர்ப் பன்மயத்தன்மையின் கருவூலமாக அமேசான் இருந்தாலும் குறிப்பாக ஈஸ்ட் உட்பட இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டிய உயிரினங்கள் ஏராளம் உள்ளன. கார்லோஸ் அடங்கிய ஆய்வுக்குழுவினரே அமேசானில் இருந்து இதுவரை புதிதாக அறியப்பட்டுள்ள 30 முதல் 50% ஈஸ்ட் இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் டாம் மற்றும் புருனோவின் அமேசான் வளங்களைப் பாதுகாக்கும் ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
போராளிகளின் பெயர் சூடும் ஈஸ்ட் இனங்கள்
புதிய இனங்களுக்கு இந்த இரு சூழல் போராளிகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் அமேசான் சூழல் பாதுகாப்புப் போராட்டங்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இது கருதப்படுகிறது.
இந்த ஈஸ்ட் இனங்கள் அமேசானில் பாரா (Para) பிரதேசத்தில் அழுகிய மரப்பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட நான்கு தனித்த இனங்களில் இரண்டில் ஒன்றின் பெயர் ஸ்பாத்தோஸ்போரா புருனோ பெரிரோ எஸ்பி நாவ் (Spathaspora brunopereirae st nov).
டாம் பிலிப்ஸ் அவர்களின் நினைவாக ஸ்ப்பேத்தோஸ்போரா டாம்பிலிப்ஸி எஸ்பி நாவ் (Spathaspora domphillipsii sp nov) பெயரிடப்பட்டுள்ள மற்றொரு இனம் டாக்கண்டின்ஸ் (Tocantins) மாநிலத்தில் உள்ள செராடோ (Cerrado) சூழல் மண்டலத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மீனஸ் ஜெரைஸ் (Minas Gerais), டாக்கண்டின்ஸ் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கனடா மேற்கு ஆண்டோரியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
யார் இந்த சூழல் போராளிகள்?
பிலிப்ஸ் மற்றும் பெர்ராரெ 2022 ஜூனில் பிரேசில் பெரு எல்லைப்பகுதியில் ஜவாரி (Javari) என்ற சமவெளிப் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டனர். புகழ்பெற்ற கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனங்களுக்கு முன்பு செய்தியாளராக பணியாற்றிய பிலிப்ஸ் அமேசான் காடுகளின் நீடித்த வளர்ச்சி பற்றிய புத்தகத்தை எழுதும் ஆய்வுப்பணியில் அமேசானில் இருந்தபோது இந்த கொலை நடந்தது.
பெரிரோ அமேசான் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். பிலிப்ஸின் வழிகாட்டி. உள்ளூர் செயல்பாட்டாளர். பிலிப்ஸ் அவர்களுடன் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது அவரும் கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக நான்கு பேர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்பு கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாவர மற்றும் விலங்கினங்களுக்கு இது போல சூழல் போராளிகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
க்ரெட்டா தன்பெர்கின் பெயரில் புதிய வண்டு
இனம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வாளர்களால் ஆயிரக்கணக்கான புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவற்றிற்கு இது போல மகத்தான மனிதர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த ஹார்ஸ் ஈ (horse fly) இனத்திற்கு இதுபோல பெயரிடப்பட்டது. புகழ்பெற்ற சூழல் போராளி க்ரெட்டா தன்பெர்கின் பணிக்காக 2019ல் கண்டுபிடிக்கப்பட்ட வண்டு இனம் ஒன்றிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கார்ட்டூன் கதாபாத்திரம்
2001ல் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்போர் வகையைச் சேர்ந்த காளான் இனத்திற்கு ஸ்பாஞ்ஜிபாஃப்ஸ்குயர் பேண்ட்ஸ் (SpongeBob Square Pants) என்ற புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பெயர் வைக்கப்பட்டது.
சூழல் காக்க வாழ்வை அர்ப்பணிக்கும் போராளிகளின் பெயர்கள் புதிய உயிரினங்களுக்கு வைக்கப்படுவதன் மூலம் என்றும் அவர்கள் நினைவுகூரப்படுவர் என்பது உறுதி.